Saturday, 13 April 2019

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை 

கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என கடந்த ஆண்டு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சில பள்ளிகள் நடத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆண்டு கோடையில் வெப்ப நிலை மிகத் தீவிரமாக உள்ளதால் மாணவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும். மேலும் கோடை விடுமுறை என்பது மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்து கொள்ளவும் உறவுகளை மேம்படுத்திடவும் நல்ல வாய்ப்பாகும். இதனால் மாணவர்களின் வாழ்வியல் விழுமியம் மேம்படும். 


எனவே, மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறக் கூடாது. இதனை பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


மேலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன என பெற்றோரிடமிருந்து பள்ளிகள் மீது புகார் வரப்பெற்றால், அதன் மீது எந்தவித கால தாமதமுமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment